வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்

தடையின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- வெளிவிவகார அமைச்சு

நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் 68,000 இலங்கையர் காத்திருப்பு

வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்று கொரோனா வைரஸ் சூழ்நிலையில் மீண்டும் இலங்கை திரும்ப எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 68,000 இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்த வாரத்தில் இந்தியா, குவைத், டொரொண்டோ சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,400 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரை 137 நாடுகளில் அவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த 60 ஆயிரத்து 470 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் மேலும் 68,000 பேர் காத்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மேலும் 68,000 பேர் நாட்டுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே பெரும்பாலானோர் வருகை தந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் நிலவும் சூழ்நிலையில் அவர்கள் தொழிலில் இருந்து விலக்கப்பட்ட நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த வாரத்திலும் மேலும் 1400 பேரை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கிணங்க இந்தியா, குவைத் டொரண்டோ, சைப்ரஸ், துபாய்,, மெல்பன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே அவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை