அடக்கமா? தகனமா? என்பது பிரச்சினை இல்லை; விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படின் ஏற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தயார்

- மனித நேயத்துடன் அணுகுமாறு இம்தியாஸ் எம்.பி வேண்டுகோள்

கொவிட் 19தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் தொடர்பிலான விடயத்தை முஸ்லிம்களின் பிரச்சினையாகப் பார்ப்பதையும் விடுத்து அதனை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக அணுக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  புதன்கிழமை (20)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அடக்கமா? அல்லது தகனமா? என்பது ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினையல்ல. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார். ஆனால், இங்கு நடப்பது வேறொன்று. அதைத்தான் நாங்கள் பிரச்சிணை என்கிறோம். 

உலகில் 192நாடுகள் ஒரு முடிவைப் பின்பற்றும் போது இலங்கை மட்டும் அதிலிருந்து விலகி செயற்படுகிறது. இறுதியாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட துறைசார் வைத்தியர்களின் அறிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

இதை முஸ்லிம்களின் பிரச்சினையாகப் பார்ப்பதையும் விடுத்து ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இறுதி மரியாதைக்கு உரிய இடத்தை கொடுக்க வேண்டும். மனித விழுமியம் அற்ற ஒரு தேசமாக எமது நாட்டின் அபிமானத்தை இதன் மூலம் சிதைக்கக் கூடாது.தேசத்தின் அடையாளத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகுமென்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்     

Fri, 01/22/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை