மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

- விசேட சலுகை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால்  நேற்று (19) காலை 10மணி தொடக்கம் 11மணி வரையில் ஒரு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

வைத்தியசாலையின் வைத்திய சேவைக்குப் பாதிப்பில்லாமல் அரச தாதியர் சங்கம், பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர்  கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிசிச்சைக்காக காத்தான்குடி  வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிசிச்சைப் பிரிவிற்கு  அனுப்பிவைக்கப்பட்டபோது, அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர். 

இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள், தாதியர்கள் என பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.    தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொற்றுக்குள்ளான நிலையில்  கடந்த (17) மேற்படி தாதி தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு குறூப், வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்

Wed, 01/20/2021 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை