அடக்கம் செய்யப்படவிருந்த பிரேதத்தை எரிக்க உத்தரவு

பிசிஆர் அறிக்கை கிடைப்பதற்கு முன்னர் அடக்கம் செய்வதற்கு ஆயத்தமான ஜனாஸா பின்னர், பொசிடிவ் என அறிவிக்கப்பட்டதால் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கொகெரெல்ல,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வைத்தியசாலை, நிர்வாகம் ஒப்படைத்திருந்த பிரேதத்தை அடக்கம் செய்ய முனைந்த வேளையிலே, பொசிடிவ் என அறிவிக்கப்பட்டது.மல்சிரிபுர நீரமுல்ல பிரதேசத்தில் 35வயதுடைய நபர் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில், அவரச சிகிச்சைப் பிரிவில் (20) உயிரிழந்தார்.இந்நிலையில் பி. சீ. ஆர். பரிசோதனை கிடைப்பதற்கு முன்னர் உறவினரிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் மறுநாள் பிசிஆர் அறிக்கையில் பொசிடிவ் எனக் குறிப்பிடப்பட்டதால், பிரேதத்தை எரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதனால் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இப்பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகள், இரு முன்பள்ளிப் பாடசாலைகள், 07வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மரண வீட்டுக்கு  சமூகமளித்த 175பேர்களுக்கு மேற்பட்டவர்களை, சுய தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பாகமுவ சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

இப்பாகமுவ சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி ஜீ. டி . அபேயகோனின் ஆலோசனையின் பிரகாரம்,  பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் டப்லியு எம்.  ஏ. வீரசேகரவின் தலைமையில் கொகெரெல்ல பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

(மாவத்தகம நிருபர்)

Mon, 01/25/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை