பாடசாலைகள் இன்று ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வுள்ளதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்றைய தினம் முதல் இரண்டாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதேவேளை, சுகாதார அமைச்சினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அனைத்து பாடசாலைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கடந்த விடுமுறை காலத்துக்கு முன்னரே சுகாதார அமைச்சு உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதன் பின்னர் மீண்டும் ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய பரிந்துரைகள் கல்வி திணைக்களங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச சுகாதார மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடங்கிய குழுக்கள் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளன.

அந்த குழுக்களின் பரிந்துரைக்கு இணங்கவே நாம் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்தோம்.அதேவேளை மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு அனுமதி வழங்கவில்லை.

கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கும் வரை டியூஷன் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது.

பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் டியூஷன் வகுப்புகள் நடத்துவது தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் வவுனியா நகர்புறங்களில் பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை