சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்று

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்று-Pavithra Wanniarachchi Tested Positive for COVID19

- இலங்கையில் கொரோனா தொற்றிய 5ஆவது எம்.பி
- 2ஆவது அமைச்சருக்கும் பலனற்று போன தம்மிக பாணி

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 5ஆவது பாராளுமன்ற உறுப்பினராவார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தற்போது ஹிக்கடுவவில் உள்ள சிகிச்சை நிலையமொன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் உறுதிப்படுத்தியிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் மேற்கொண்ட PCR சோதனையிலும்  அது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாரச்சி நேற்றையதினம் (22) ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில் அவருடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நேற்றுமுன்தினம் (21) நெலும் மாவத்தையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் அமைச்சர் பவித்ரா பங்கேற்றிருந்தார்.

அந்த வகையில், இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம் எம்.பி., அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இதில் தயாசிறி ஜயசேகர குணமடைந்து தற்போது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நிகழ்வொன்றின்போது, கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் என தம்மை அடையாளப்படுத்தி வரும் தம்மிக பண்டார தயாரித்த, கொரோன வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட பாணியை அருந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாணியை அருந்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட PCR சோதனையில் அங்கு கடமையாற்றும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

Sat, 01/23/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை