தனியார் துறை சம்பளம்; மார்ச் இறுதி வரை நீடிப்பு

- தொழில் அமைச்சரின் யோசனை ஏற்பு

கொவிட் 19தொற்று நிலைமையில் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான ஒப்பந்த காலத்தை மார்ச் 31வரை நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.  

கொவிட் 19தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையில் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் உறவுகள் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவப்பட்டுள்ள செயலணிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களை தொழிலிருந்து நீக்காமல் இருத்தல், அனைத்து ஊழியர்களும் தொழிலில் ஈடுபடுவதற்கு சமமான வாய்ப்பு வழங்கல், ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டால் இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50% வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல் குறித்த சம்பளத்திற்கு தொழில் வழங்குனர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு செய்தல் போன்றவற்றை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிவரை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.  

கொவிட் 19 தொற்று காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோடு விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சுற்றுலாத்துறை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, குறித்த துறையின் ஏற்புடைய நிறுவனங்களுக்கும் கொவிட் 19 தொற்று நிலைமையால் செயற்பட இயலாமல் இருக்கும் நிலையில் ஏனைய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்படி சலுகைகளை 2021 மார்ச்சு மாதம் இறுதி வரை நீடிப்பதற்காக தொழில் அமைச்சர் யோசனைக்கு முன்வைத்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. 

Wed, 01/13/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை