ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கும் தினத்தில் நாடெங்கும் ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறும் ஜனவரி 20 ஆம் திகதி 50 மாநிலங்களினதும் தலைநகரங்கள் மற்றும் வொசிங்டன் டி.சியில் ஆயுதம் தரித்த குழுக்கள் ஒன்றுகூட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதனை ஒட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 'கிளர்ச்சியை தூண்டியதாக' ஜனாதிபதி மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதோடு டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தவறும் பட்சத்திலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனைச் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்து பென்ஸ் இடம் இருந்து எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்பிட்டல் கட்டிடத்தில் இடம்பெறும் நிகழ்விலேயே ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்கவுள்ளனர். கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்றது போல் மற்றொரு அத்துமீறல் நிகழ இடமளிப்பதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களால் உறுதி செய்து வாக்களிப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்திலேயே ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ட்ரம்ப் ஆதாரமின்று குற்றம்சாட்டி வந்த சூழலிலேயே இந்த வன்முறை இடம்பெற்றது. இதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

அது தொடக்கம் டிரம்பை பதவி விலகும்படி அழுத்தம் அதிகரித்திருப்பதோடு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தவிர, டிரம்பின் சமூக உடகங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதோடு, குறிப்பாக டிவிட்டர் அவரது கணக்கை நிரந்தரமாக நிறுத்தியது.

இதனிடையே ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 20ஆம் திகதியன்று தலைநகர் வொஷிங்டன் டி.சியை நோக்கி பயணப்பட இருப்பதாக, டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை எல்லா மாநில தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்கலாம் என எப்.பி.ஐ எச்சரித்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில சபைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப் பதவிக் காலத்துக்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் ட்ரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர், மாநில மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Wed, 01/13/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை