இந்தியாவிலிருந்து நாளை ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்

* கிடைக்க பெற்றதும் ஏற்றல் ஆரம்பம்

* சுகாதார, பாதுகாப்பு தரப்புக்கு முன்னுரிமை

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தி யா அன்பளிப்புச் செய்யும் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனகா தடுப்பூசியை ஏற்றிவரும் விசேட விமானம் நாளை 28ஆம் திகதி மதியமளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாராநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின்மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள மேற்படி தடுப்பூசி இந்தியாவின் பம்பாய் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேற்படி தடுப்பூசியை ஏற்றிவரும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 இலக்க விமானம் முதலில் இந்தியாவின் புது டெல்லியிலிருந்து புறப்பட்டு பம்பாய் விமான நிலையத்தை சென்றடையவுள்ளது. அங்கிருந்து தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு நாளை 28 மதியம் அளவில் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மேற்படி விமான சேவை இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து நேரடியாக இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது .

விமானம் மூலம் கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகளின் சுமார் 1,323 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. விமானத்தில் விசேட குளிரூட்டிகளின் உதவியுடன் பாதுகாப்பாக தடுப்பூசி கொண்டுவரப்படவுள்ளதுடன் விமான நிலையத்தில் அது விசேட குளிரூட்டிகள் அறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு அன்றைய தினமே சுகாதார அமைச்சின் மருந்துகள் களஞ்சியப்படுத்தல் பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை ஏற்றி வரும் இந்திய விமானத்தில் மேலும் 20 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மதியம் மேற்படி ஊசி மருந்துகளை ஏற்றிவரும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த நிலையில் அந்த நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அது நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை