சகலரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சமாதானமும் மலர பிரார்த்திக்கிறேன்

புதுவருட செய்தியில் அதிவண. பிதா சந்திரகுமார்

புத்தாண்டில் புதுமைகள் தொடரவும், மாற்றங்கள் மலரவும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும் சமாதானமும் பெருகிட பிரார்த்திக்கின்றேன்.

நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் குடும்பத்திலும் நம்முடைய நாட்டிலும் பலவிதமான மாற்றங்கள் காணப்பட்டாலும் இதுவரை நம்மை எல்லா தீமைக்கும் சகல விதமான ஆபத்துகளிலும் இருந்து பாதுகாத்த ஆண்டவர் தாமே இந்த ஆண்டிலும் அப்படியே செய்வாராக என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பு செயலாளர் அதி வணக்கத்திற்குரிய பிதா அருட் கலாநிதி எஸ். சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,...

கடந்த ஆண்டினை பார்க்கும் பொழுது உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கோவிட்- 19 என்ற தொற்று நோயானது இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டு, மனித உள்ளங்களை கலங்கடிக்கச் செய்ததுடன் எல்லோருடைய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இல்லாது ஒழித்திருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்து அநேகர் தொழில் வாய்ப்பினை இழந்தும், அரச நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், யாவும் மூடப்பட்டு நாம் சுதந்திரமாய் நடக்க முடியாமல் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டதுடன், தாய் நாட்டை விட்டு போனவர்கள் மீண்டும் தங்கள் உறவுகளை காணமுடியாமல் தவிக்கின்ற பரிதாபமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒரு வருடத்தை ஆரம்பிக்கும் பொழுது பரிசுத்த வேதகமத்திலே ஆண்டவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் எபோழுதுமே உற்சாகத்தையும், தைரியத்தையும் கொடுக்கின்றதாகவே காணப்படுகின்றது.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உங்கள் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை