சிறு நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகள்

வழங்க அரசு நடவடிக்கை என்கிறார் பிரதமர் மஹிந்த

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ (07) ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற குழு அறை 02 இல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாரியளவிலான அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னர் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாட்டில் காணப்படும் உத்தரவாத நெல் விலைக்கு ஏற்ப பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அரிசிக்கான நிலையான விலையை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணமாக கடன்களை செலுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலின்போது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஷெஹான் சேமசிங்க, இந்திக அநுருத்த, அஜித் நிவாட் கப்ரால், ஷசீந்திர ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, வங்கி, சதொச மற்றும் நெல் விநியோக சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை