குர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது

- ஜம்-இய்யதுல் உலமா கடிதம் மூலம் பதில்

கொவிட் 19தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வது தொடர்பாக  பாராளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து  தொடர்பில் பெரிதும் ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.  

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  

கொவிட் 19காரணமாக உயிரிழப்போர் விடயத்தில் தாங்கள் கடந்த ஜனவரி 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை எமக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாகவுள்ளது.  

அமைச்சர் என்ற ரீதியிலும், ஒரு சட்டத்தரணி மற்றும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரென்ற ரீதியிலும் தாங்கள் இதனைவிட இவ்விடயத்தை மேலும் ஆராய்ந்து செயற்பட்டிருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோம். தாங்கள்   பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பொருந்தாததாகவும் மிகவும் தவறானதுமாகும்.  

இஸ்லாமிய மத விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அவ்விடயத்தில் அதிகார அறிவை கொண்டுள்ள இஸ்லாமிய கல்விமான்களுக்குப் பொறுப்பானதாகும்.  

இந்நிலையில் புனித குர்ஆன் தொடர்பாக தாங்கள் இரண்டு முறை கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். உயிரிழப்போரை அடக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல என குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தாங்கள் கூறியிருப்பது தவறானதாகும் என்பதை விளக்கிக்கூற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை விரும்புகிறது. அத்துடன் இஸ்லாம் மத போதனைகள் தொடர்பாக சில விடயங்களை புகட்டவும் விரும்புகிறது.  

தாங்களின் அறிக்கைக்கு மாறாக அடக்கம் பற்றி குர்ஆன் கிட்டத்தட்ட 10 இடங்களில் கூறுகிறது. அடக்கம் பற்றிய கடப்பாடு மற்றும் அது தொடர்பான நடைமுறைச் செயற்பாடு நபிகள் நாயகத்தின் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாகும். ஒவ்வொரு மதமும் அதற்குரிய தனித்துவமான போதனைகளை கொண்டதென்பதை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்பது முக்கியமானதாகும். அதனை மூலத்திலிருந்து பெற்று நடைமுறைப்படுத்துவது முஸ்லிம் மத கல்விமான்களின் பொறுப்பாகுமென்று அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

Fri, 01/15/2021 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை