புதுக்குடியிருப்பில் கரடி தாக்குதலில் விவசாயி படுகாயமடைந்துள்ளார்

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும், கையிலும் கரடியின் கடிகாயங்களுக்குள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாகண்டல் பகுதியில் வயல் விதைத்துள்ளதாகவும் அதனை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பிய போது நடந்துவரும் பாதையின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.

நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு மருத்துவமனை சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அண்மையில் பெய்த மழையால் காட்டில் வெள்ளநீர் வற்றாது காணப்படுவதால் காட்டிலுள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்களை நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை விட புதுக்குடியிருப்பு காட்டில் கரடி நிற்பது என்று எல்லோராலும் கதைக்கப்பட்டாலும் கரடித்தாக்குதலுக்கு இலக்கான முதல் சம்பவமாக இது காணப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Wed, 01/27/2021 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை