பாகிஸ்தானுக்கு கூட்டணியைச் சேராத நட்பு நாடு அந்தஸ்து இரத்து

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய நட்பு நாடு அந்தஸ்தை இரத்து செய்யும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 117-ஆவது மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதலாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அப்போது, குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஆண்டி பிக்ஸ் என்ற எம்.பி. பாகிஸ்தானுக்கு எதிரான மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில் அந்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை இரத்து செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் தொடா்ந்து விளங்கி வருவதன் காரணமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதாக எம்.பி. பிக்ஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க அதிபா் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பயங்கரவாதிகளின் தலையீடு அதிக அளவில் இல்லாமல் இருப்பதையும் பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டால், அமெரிக்காவிலிருந்து முக்கிய இராணுவத் தளவாடங்களை பாகிஸ்தானால் கொள்முதல் செய்ய முடியாது. மேலும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டபிள்யூ.புஷ் தலைமையிலான அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியது. தற்போது வரை அந்த அந்தஸ்து 17 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு நிறுத்தியது நினைவுகூரத்தக்கது.

Thu, 01/07/2021 - 12:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை