ஆப்கானில் இரு பெண் நீதிபதிகள் படுகொலை

ஆப்கான் தலைநகர் காபுலில் நேற்று உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.    வாகனம் ஒன்றில் தமது அலுவலகத்திற்கு பயணிக்கும் வழியில் துப்பாக்கிதாரிகளால் இவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.  

ஆப்கானில் அண்மைய மாதங்களில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் படுகொலைகளின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.    இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான்கள் மீது சந்தேகம் வெளியிடப்பட்டபோதும் எந்தத் தரப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.  

தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையே கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.    ஆப்கான் உயர் நீதிமன்றத்தில் 200க்கும் அதிகமான பெண் நீதிபதிகள் பணி புரிகின்றனர். உயர் நீதிமன்றத்தை இலக்கு வைத்து 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 20 நீதிமன்ற ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தானில்  அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 2,500ஆகக் குறைத்துள்ளதாக பென்டகன் அறிவித்த இரண்டு நாட்களில் இந்த படுகொலை நடந்துள்ளது.

Mon, 01/18/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை