சீனாவில் இதுவரை காணாமல் போன முக்கியஸ்தர்கள் பலர்

சீனாவின் மிகப் பெரிய ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான ஜாக் மா, சீனா அரசையும் சீன வங்கி அமைப்பையும் சில மாதங்களுக்கு முன்பாகக் கடுமையான கருத்துகளுடன் விமர்சித்தார். இதன் எதிரொலியாக அலிபாபா குழுமத்தின் டிஜிட்டல் நிதியியல் சேவை பிரிவான ஆன்ட் குரூப் நிறுவனத்தின் ஐ.பி.ஓ மீது தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக ஆன்ட் குரூப் மீது சீன அரசு 'மோனோபோலி' வழக்குத் தொடுத்தது. இப்படி அடுத்தடுத்து வர்த்தகத் தடைகளைச் சீன அரசு அலிபாபா மீது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாத காலத்தில் அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக் மா வெளியுலகத்திற்குத் தென்படாமல் மாயமாகியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய ஜாக் மா, திடீரென வரவில்லை. இதனால் அலிபாபா குழுமத்தின் மற்றொரு அதிகாரி ஜாக் மாவின் இடத்திற்கு வந்தார். இதேவேளையில் இந்த நிகழ்ச்சி இணையத்தளத்தில் ஜாக் மா புகைப்படம் நீக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் மூலம் ஜாக் மா வெளியில் வருவதை விரும்பவில்லை எனக் கணிக்கப்பட்டது.

ஆனால் சீன அரசு தொடர்ந்து அலிபாபா, ஆன்ட் குரூப் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை விதித்து விசாரணையைத் தொடங்கிய நிலையிலும் ஜாக் மா வெளியில் வரவில்லை. இது சீனர்கள் மத்தியில் மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்பியது. இதைத் தொடர்ந்து யாஹூ பைனான்ஸ் தளம் ஜாக் மா-வை கடந்த 2 மாதமாகக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வு சீனாவில் புதியது அல்ல, ஏற்கனவே பல தொழிலதிபர்கள், இதுபோன்று மாயமாகி உள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு தவறவிட்டுள்ளது என மார்ச் மாதம் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான Ren Zhiqiang தனது சமுக வலைத்தள கணக்கில் பதிவிட்டார்.

இந்தப் பதிவிற்குப் பின் Ren Zhiqiang திடீரென மாயமானார். பல மாதங்களுக்குப் பின் சீன அரசு அவரை 18 வருடம் சிறையில் அடைத்துள்ளதாகத் தகவல்களை வெளியிட்டது. இதே போல் கொரோனா கட்டுப்படுத்த தவற விட்டுள்ளது எனக் கூறிய சட்டக் கல்லூரி பேராசிரியரான Xu Zhangrun, மனித உரிமை வழக்கறிஞர் Zhang Xuezhong ஆகிய இருவரும் திடீரென மாயமானார்கள். இன்று வரையில் இவர்களின் நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

2017ல் இதேபோல் சொத்து மேலாண்மை நிர்வாகத் தலைவரான Xiao Jianhua 2017ஆம் ஆண்டு அரசுக்கு எதிராகக் கருத்து பதிவிட்ட காரணத்தால் ஹாங்காங் ஹோட்டலில் இருந்து திடீரென மாயமானார். பின் நாளில் சீன அரசு Xiao Jianhua-வின் டுமாரோ குரூப் நிறுவனத்தின் பங்குகளையும், சொத்துக்களையும் கைப்பற்றியது. மேலும் 2018இல் இண்டர்போல் முன்னாள் தலைவரான Meng Hongwei சீனாவிற்குச் சுற்றுலா சென்ற போது திடீரென மாயமானார். ஆனால் 2020 ஜனவரி மாதம் லஞ்ச வழக்கில் இவரைச் சீன அரசு சுமார் 13.5 வருடம் சிறையில் அடைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இப்படிச் சீன அரசுக்கு எதிராகவும், சீன தலைவர்களுக்கும் எதிராகவும் பேசிய, கருத்து பதிவிட்ட பலர் மாயமாகியுள்ளனர். குறிப்பாகக் கொரோனா குறித்து ஆரம்பக் கட்டத்தில் தகவல் வெளியிட்ட பல மருத்துவர்கள், வைரஸ் ஆய்வாளர்கள் பலர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

(OneIndiaTamil)

Wed, 01/06/2021 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை