காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்கள்

காசாவில் இருந்து ரொக்கெட் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மீது இஸ்ரேல் பேர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின.

தெற்கு நகரான ராபவில் உள்ள விவசாய நிலம் ஒன்றின் மீதே இஸ்ரேலின் வான் தாக்குதல் இடம்பெற்றதாக பலஸ்தீன தரப்புகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று வடகிழக்கு கான் யூனிசின் அல் கராரா நகரில் உள்ள அல் புர்கான் பள்ளிவாசலுக்கு அருகிலும் இஸ்ரேலின் ஏவுகணை விழுந்துள்ளது.

இஸ்ரேலின் தெற்கு நகரான அஷ்டோட்டை நோக்கி காசா பகுதியில் இருந்து இரண்டு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பதிலடியாக, காசாவில் சுரங்கப்பாதை தோண்டப்பட்ட தளங்கள் உட்பட ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான இலக்குகளை போர் விமானங்கள் தாக்கின” என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

பலஸ்தீனர்கள் வீசிய ரொக்கெட் குண்டுகள் மத்தியதரைக் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மறுபுறம் இஸ்ரேலிய ஏவுகணைகள் பொருட்சேதத்தை ஏற்படுத்தியதாகவும் உயிர்ச்சேதங்கள் இடம்பெறவில்லை என்றும் பலஸ்தீன பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

கட்டாரின் மத்தியஸ்தத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் அண்மைய மாதங்களில் இங்கு அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை