தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் முறைகேடு செய்வோர் கைதாவர்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கடும் எச்சரிக்ைக

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளின்போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து அத்தகையோருக்கு எதிராக வழக்கு தொடரப்படுமென கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் மிக நம்பிக்கையானதாக இராணுவத்தினர் முன்னெடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் கட்டியெழுப்பியுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும்போது அங்கு அதிகளவு பணம் அவர்களிடம் அறவிடப்படுவதாகவும் அத்துடன் இரண்டாம் தரப்பு நபர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு இடமளிக்கக் கூடாதென ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பின்னரே இதுபோன்ற மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அத்தகையோர் இனங்காணப்பட்டு கைது செய்யப்படுவார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி மத்திய நிலையத்தில் நடைபெற்றுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அது தொடர்பான அதிகாரிகள் மத்தியில் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரை தனிமைப்படுத்தும் போது அவர்களுக்கு தேவையான வசதிகளை நியாயமான கட்டணத்தில் பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனியும் அவ்வாறான முறைகேடுகள் இடம்பெறும் மானால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அதனை இராணுவத்தினரின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை வெளிநாடுகளிலிருந்து நேற்றைய தினம் மேலும் சுமார் 800பேர் நேற்று நாடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவர்களை இராணுவத்தின் பராமரிப்பில் செயற்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கும் மற்றும் ஹோட்டல் களுக்கும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் இதுவரை 83 ஆயிரத்து 862 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 71,000 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Fri, 01/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை