பைடனின் வெற்றியை தடுக்க செனட் குடியரசு கட்சியினர் கடைசி முயற்சி

தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் வரை ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதை அமெரிக்க செனட் சபைக் குழு ஒன்று நிராகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் நியமிக்கப்படுவதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகளில் ஒன்றான செனட் சபையின் அங்கீகாரத்தை வழங்குதற்கே டெட் க்ரூஸ் தலைமையிலான 11 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளை 10 நாட்கள் அவசர பகுப்பாய்வு செய்வதற்கான அதிகாரத்துடன் தேர்தல் ஆணைக்குழு ஒன்றுக்கு அந்த செனட்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த பத்து நாள் ஆய்வு பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஜனவரி 6 அன்று சர்ச்சைக்குரிய மாநிலங்களில் தேர்தல் சபையை நிராகரித்து வாக்களிப்போம் என்று அந்த செனட் குழு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் சபையின் முடிவை உறுதி செய்து வரும் ஜனவரி 6 இல் அமெரிக்க பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்பதற்கு பதவியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக டிரம்ப் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். “பெரும் வெற்றி ஒன்றை களவாடும் முயற்சி ஒன்று இடம்பெறுகிறது. அது நடக்க விட முடியாது” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளார். எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் 11 செனட்டர்களின் பெயர்களை குறிப்பிட்டு, “இவர்கள் உண்மையை பார்த்த பின்னர், மேலும் பல விடயங்கள் வரவிருக்கின்றன. அதற்காக எமது நாடு அவர்களை விரும்பும்” என்றும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குடியரசு கட்சியின் இந்த கடைசி நேர முயற்சி வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சபை வாக்குகளை நிராகரிப்பதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஆதரவு தேவையாக உள்ளது. இதில் பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் 306 தேர்தல் சபைகளை வென்று வெற்றியை உறுதி செய்ததோடு டிரம்ப் 232 தேர்தல் சபைகளையே கைப்பற்றினார். அமெரிக்க பாராளுமன்றம் இதனை அங்கீகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நடைமுறை முடிந்த பின் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை