பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து 73 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கையின் 73 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் இம்முறை சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றிய நிலையில் எவ்வித குறைப்பாடுகளுமின்றி தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழமை போன்று கம்பீரமான முறையில் நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்ண (ஓய்வு) தெரிவித்தார். நாட்டில் தற்பொழுது காணப்படும் கொவிட்19 நிலைமையை கருத்திற் கொண்டு அழைப்பிதழ்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வருகை தரும் பிரமுகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அதேபோன்று அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முப்படைவீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சுதந்திர தின நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு ஆகியவற்றில் கலந்து கொள்ளும் அனைவரும் பீசிஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும் இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் கமால் குணரட்ண குறிப்பிட்டார். 73ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் (20) நடைபெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் விரிவாக கலந்துரையாடியதுடன், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க முப்படை தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Sat, 01/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை