நெதர்லாந்தில் 3ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் மூன்றாவது நாளாகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மேலும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரான ரொட்டாமில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகமடக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதோடு, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு நகர மேயர் மேலதிக அதிகாரங்களை வழங்கியுள்ளார்.

சிறு நகரங்கள் மற்றும் நகரங்களிலும் பதற்றம் இடம்பெறும் நிலையில் ஹார்லம்மில் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடி பொருட்களை திருடிச் சென்றதோடு வீதியில் நின்ற வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இந்த வன்முறையின்போது கொரோனா பரிசோதனை மையம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.

நெதர்லாந்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் அந்நாட்டில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டிருப்பது முதல்முறையாகும்.

பிரிட்டனில் புதிய கொரோனா திரிபு நெதர்லாந்தில் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

நெதர்லாந்தில் தொற்றுச் சம்பவங்கள் ஒரு மில்லியனை நெருங்கி இருப்பதோடு 13,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் நெதர்லாந்தில் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஒக்டோபர் தொடக்கம் அங்கு மதுபானக் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் கடந்த மாதம் மூடப்பட்டன.

Wed, 01/27/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை