வாழைச்சேனையில் 354 பேருக்கு டெங்கு; குடம்பிகள் காணப்படும் இடங்கள் சோதனை

- நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இருபத்தைந்தாம் திகதி வரை 354 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

இந்த நிலையில் நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பேத்தாழை, கண்ணகிபுரம், புதுக்குடியிருப்பு, கல்மடு, கறுவாக்கேணி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய கிராமங்களில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, ஏறாவூர், செங்கலடி, கிரான், வாகரை, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் இணைந்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

கல்குடா தினகரன் நிருபர்

Thu, 01/28/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை