தனியார் வகுப்புகள் ஜன.25 முதல் ஆரம்பம்

சஜித்தின் கேள்விக்கு ஜீ.எல்.பீரிஸ் பதில்

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 27/2 கீழ் தனியார் வகுப்புகள் எப்போது ஆரம்பிக்கப்படுமென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டில் இரண்டு பரம்பரையினருக்கு கல்வியை போதித்தவன் என்ற அடிப்படையில் தனியார் வகுப்புகள் மூலம் மாணவர்கள் அடையும் நன்மைகளை நன்கு அறிவேன். அதன் பெறுமதிகள் தொடர்பில் எமக்கு எவரும் கற்பிக்க வேண்டியதில்லை என்பதுடன், நாட்டு மக்களுக்கும் அதுபற்றி தெரியும்.

முழுமையான கல்விக் கட்டமைப்புக்கு புத்துயிர் கொடுப்பதென்பது இந்த நெருக்கடியான சூழலில் மிகவும் சவால்மிக்க விடயமாகும். இந்தப் பிரச்சினை எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுவொரு பூகோள பிரச்சினையாகும். நாம் ஏற்பட்டுத்திய பிரச்சினையல்ல.

இந்நிலையிலிருந்து மீண்டெழ அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை தயாரித்து செயற்படுத்தி வருகிறது. ஆனால், உடனடியாக இதனை செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும். உடனடியாக அனைத்து விடயங்களையும் செய்யப் போனால் முழு கட்டமைப்பும் சீர்குலைந்துவிடும். ஆழமாக அவதானம் செலுத்தி உரிய வேலைத்திட்டங்கள் ஊடாகவே மீண்டும் முழுமையான கல்விக்கட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முடியும். தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பது மாத்திரமல்ல முழுமையான கல்வித்துறையை மீள திறப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 06ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளை ஆரம்பித்திருந்தோம். அதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் ஆரம்ப வகுப்புகளுடன் முன்பள்ளிகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். ஜனவரி 25ஆம் திகதி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதர வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆகவே, படிப்படியாகத்தான் கல்விக்கட்டமைப்பை திறக்க முடியும். அதேபோன்று கல்வித்துறையில் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோமென்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை