புதுவருடத்திற்கான பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்

மேல்மாகாணம் தவிர்ந்த பாடசாலைகள் 11இல் தொடக்கம்

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் 11ஆம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் இவ்வாறு எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் தினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 11ம் திகதி வரை அந்த பரீட்சைகள் நடைபெறும்.

அந்த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக பதினோராம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மிக முக்கியமாகும். அதற்கிணங்கவே அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதற்கிணங்க மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களில் தனிமைப்படுத்தி லுக்காக முடக்கப்பட்டுள்ள பொலீஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் பதினோராம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாத இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேவேளை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றியே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான பாடசாலைகளில் மூன்றில் இரண்டு மடங்கு பாடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியதை இவ்வருடம் முதலாம் தவணையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 01/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை