கலை, விஞ்ஞான பீடங்களின் நூற்றாண்டு விழா ஜனவரி 21 இல்

ஜனாதிபதி, பிரதமர் அதிதிகள்

இலங்கையில் உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் கொழும்பு பல்கலைக்கழகம், தனது கலை மற்றும் விஞ்ஞான பீடங்கள் மற்றும் பிரதான நூலகம் ஆகியவற்றின் நூற்றாண்டு பூர்த்தியை குறிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் கல்லூரி இல்ல வளாகத்தில் காலை 08.00 மணி முதல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.விஞ்ஞான பீடத்தின் தகவல் மற்றும் பயிலல் வளங்கள் நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான வளங்கள் நிலையம், பீடத்தின் சந்திப்பறை மற்றும் கலைப்பீடத்தின் உடற்பயிற்சி ஆய்வுகூடம் மற்றும் பிரதான நூலகத்தின் ஆய்வகப்பகுதி போன்றவற்றின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணத்துடன் அன்றைய தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும்.ஆண்டுபூர்த்தி தொடர்பான விசேட உரைகளை உபவேந்தர் பேராசிரியர். சந்திரிகா விஜேரட்ண, ஓய்வுபெற்ற பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க மற்றும் விஞ்ஞான மற்றும் கலை பீடங்களின் பீடாதிபதிகளான பேராசிரியர் உபுல் சொன்னதர மற்றும் பேராசிரியர் லசந்த மானவடு ஆகியோர் ஆற்றுவர். கலை, விஞ்ஞான பீடங்கள் மற்றும் பிரதான நூலகம் மற்றும் கொழும்பு கலை பழைய மாணவர்கள் சங்கத்தின் இணையத்தளங்களின் அறிமுக நிகழ்வு மதியம் நடைபெறும்.வேர்டுஸா கோர்பரேஷன் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஸ் கனகேரட்ணயின் பிரதான உரை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்பதுடன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒழுங்கிணைப்பாளர் ஹனா சிங்கரின் உரை மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

“ஆய்வு மற்றும் புத்தாக்கம்: புதிய வழமையில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” எனும் தலைப்பிலமைந்த வருடாந்த ஆய்வு கருத்தரங்கு 2020 இன் பூர்த்தி செய்யும் நிகழ்வு மெய்நிகர் நிகழ்வாக பி.ப. 5 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் பங்கேற்பார். யுனிவர்சிட்டி கொலேஜ் லண்டனின், எந்திரவியல் பொறியியல் பிரிவின் உயிரியல் பொருட்கள் தலைமை அதிகாரி பேராசிரியர் மொஹான் எதிரிசிங்கவின் உரையும் நடைபெறும். இந்தக் கருத்தரங்கின் போது பல்கலைக்கழக ஆட்சிப் பேரவையின் வருடாந்த ஆய்வு விருதுகள் வழங்கப்படும்.

 

Tue, 01/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை