யாழ். மாநகரசபை 2021 வரவு - செலவுத் திட்டம்; 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

யாழ். மாநகரசபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் 2021 ஆம் ஆண்டுக்காக சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் முதல்வர் மணிவண்ணன் தரப்பினரால் நேற்று முன்தினம் சபையில் முன்வைக்கப்பட்டது.

முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான முன்னாள் முதல்வர் ஆர்னோல்டினால் முன்வைக்கப்பட்ட யாழ்.மாநகரசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மாநகர முதல்வர் பதவியை ஆர்னோல்ட் இழந்திருந்தார்.

இந்நிலையில் புதிய முதல்வராக தெரிவான முதல்வர் மணிவண்ணன் நேற்று முன்தினம் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை சபையின் முன் வைத்திருந்தார்.

புதிய வரவு செலவுத் திட்டம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் சார்ந்த 3 உறுப்பினர்கள் கடுமையான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்.

அதன் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், முதல்வர் மணிவண்ணன் தரப்பை சார்ந்த 10 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலா ஓர் உறுப்பினர்கள் அடங்கலாக 27 வாக்குகள் ஆதரவாகவும், 3 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டிருந்த நிலையில் 15 உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.இதையடுத்து புதிய வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 01/29/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை