தினமும் 20,000 PCR பரிசோதனைக்கு திட்டம்

சுகாதார அமைச்சு தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நாளாந்தம் 10,000 பி.சி .ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை 20,000 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது 40 அரச மருத்துவமனைகளிலும் ஐந்து தனியார் மருத்துவமனைகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கிணங்க தினமும் 20,000 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நோயாளர்களை கண்டறியும் வகையில் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் 11 முக்கிய கேந்திர நிலையங்களில் மேற்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க கேகாலை மற்றும் களுத்துறை அரசாங்க மருத்துவமனைகளுக்கு பிசிஆர் பரிசோதனை கூடங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் பூரண ஆதரவு மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/27/2021 - 06:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை