பாகிஸ்தான் கோயில் இடிப்பு: 100 பேர் கைது

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

பல்லாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை முஸ்லிம்கள் குழுவொன்று கடந்த வாரம் தாக்கி அழித்தது. இந்த சம்பவம் தொடர்பாக 350க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை பொலிஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடமையைச் செய்ய தவறியதற்காக பொலிஸார் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் அரசு கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 75 இலட்சம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். எனினும் 90 இலட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிப்பதாக அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.

 

Tue, 01/05/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை