இதர கொடுப்பனவுகளுடன் 1000 ரூபா அல்ல; ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே எமக்கு வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதே கூட்டுத் தொழிற்சங்கங்களின் நோக்கம். தோட்டக் கம்பனிகளுக்கு நிவாரணம் அல்லது உர மானியம் போன்ற சலுகைகளை வழங்கியாவது அதனைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முக்கிய கட்சிகளில் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் மூலம் 1000ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்து அதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு ஏதாவது வகையில் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடனான பேச்சுவார்த்தையின் போது சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதற்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்த வகையிலாவது தோட்ட கம்பெனிகளுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனம் தொழில் அமைச்சருக்கு சமர்ப்பித்துள்ள யோசனையை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என தெரிவித்த அவர், இதர கொடுப்பனவுகளுடன் ஆயிரம் ரூபா என்பதல்ல ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்பதையும் வடிவேல் சுரேஷ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய முன் மொழிவுகள் நிறைவேற்றப்படுவது போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சம்பளமாக 860ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 140ரூபாவையும் பெற்றுக்கொடுப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கிய போதும் அதற்கு தொழிற்சங்கங்கள் சம்மதிக்கவில்லை.

நீண்ட காலம் புரையோடிப்போயுள்ள இந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 01/18/2021 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை