திருமலை ‘குட்டிப்புலி’ வன்முறை குழுவின் ‘நேவி விஜி’ உட்பட 05 பேர் அதிரடி கைது

கடற்படை புலனாய்வு தகவலில் STF நடவடிக்கை

திருகோணமலை - தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியில் செயற்படுவதாக கூறப்படும் 'குட்டிப்புலி' என்ற வன்முறை குழுவின் 05 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தேவநகர் பகுதியில் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து 01 வாள், 12 கையடக்க தொலைபேசிகள், 05 சிம் அட்டைகள், கமரா, பலவந்தமாக பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்கு குட்டிப்புலி என்ற குழுவின் உறுப்பினர்கள் முயற்சித்த போது மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பல குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீ.எம்.விஜயகாந்த் என்பவரின் தலைமையில் இக் குழு செயற்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர் சி.ஐ.டி. விஜி மற்றும் நேவி விஜி என்ற பெயரிலும் அழைக்கப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் குறிப்பிடுகின்றனர்.

 

Thu, 01/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை