கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு YMMA கடும் எதிர்ப்பு

கொவிட் -19 தொற்றின் காரணமாக மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவுக்கு அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு அல்லது வெளிநாட்டுப் பிரதேசமொன்றுக்கு அனுப்புவதை எதிர்ப்பதாக  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின்  தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில், வை.எம்.எம்.ஏ. பேரவை சார்பாக  வெளியிட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில்
அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  மனிதாபினமான உதவிக்காகவும் எமது துக்கத்தில் பங்குகொள்வதையிட்டும்  மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும், மாலைதீவு மக்களுக்கும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு,  தங்களது நிலத்தை வழங்க முன்வந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியமையானது, இஸ்லாத்தின் போதனைகளில் உள்ள அன்பு, கருணை, சாந்தி,  சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தையே வெளிப்படுத்துகின்றது.

இந்நிலையில், தாங்கள் பிறந்து பாரம்பரியமாக வாழ்கின்ற இந்த பூமியைத் தவிர, வேறு எந்த பூமியிலும் அடக்கம் செய்யப்படுவதை அவர்கள் நினைத்தும் கூடப்பார்க்க  மாட்டார்கள்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழு, முஸ்லிம்களின் உடல்களை மட்டுமல்லாது, தமது அன்புக்குரியவர்கள் மரணித்தால் அவர்களது உடல்களையும் அடக்கம் செய்ய எதிர்பார்த்திருக்கும் பௌத்த , இந்து மற்றும் கிறிஸ்த்தவ மக்களினதும் சமய, கலாசார மற்றும் சம்பிரதாயத் தேவைகள் தொடர்பில் கவனத்தில் கொள்வார்கள் என்றும், வை.எம்.எம்.ஏ.  உறுதியாக நம்புகின்றது.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ( WHO ) வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு இணங்கிய முறையில், எமது தாய் நாட்டில் கொவிட் -19 தொற்றின் காரணமாக மரணித்த எமது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யக் கூடிய விதத்தில் தொழில் நுட்பக் குழு கிட்டிய எதிர்காலத்தில் சாதகமான ஒரு முடிவை வெளியிடும் என்றும் வை.எம்.எம்.ஏ.  திடமாக  நம்புகின்றது.

 

Sun, 12/20/2020 - 19:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை