K.K.S துறைமுகம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

நேரடியாக பார்வையிட்ட அமைச்சர் ரோஹித உறுதி

காங்கேசன்துறை துறைமுகத்தின் அடிப்படை வேலைகள் நிறைவு செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தை புதன்கிழமை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சுபீட்சத்தின் நோக்கு என்ற தொனிப்பொருளில் எமது அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து மக்களும் சமமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீழ்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி மூலம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தெற்கில் பிள்ளைகள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வடக்கிலும் பிள்ளைகள் வாழ வேண்டும்.

இந்த உப செயலகம் மூலம் கொழும்பு சென்று செய்ய வேண்டிய கப்பல்கள் சம்பந்தமான வேலைகளை இங்கேயே செய்ய முடியும்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

நாம் சக்தி மிக்கவர்களாக திகழ வேண்டும். யாழ். மாவட்டத்தின் பிரஜைகள் மாத்திரமே காங்கேசன்துறை துறைமுகத்தில் வேலை செய்ய முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்கு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுமித்தி தங்கராசா

Fri, 12/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை