ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பாரிய ஆயுத விற்பனை: செனட்டில் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 23 பில்லியன் டொலர் பெறுமதியான மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை விற்பதை தடுக்கும் முயற்சி அந்நாட்டு செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த ஆயுத விற்பனையை தடுக்கும் பாராளுமன்றத்தின் முயற்சிக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்தே இந்த ஆயுதங்களை விற்பதற்கு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

எப்–35 போர் விமானங்கள் மற்றும் ரீப்பர் ஆளில்லா விமானங்ளை விற்பதை தடுக்க 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் இடம்பெற்ற இரு வாக்கெடுப்புகளில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.

ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை விஞ்சும் வகையில் இந்த ஆயுத விற்பனையை தடுப்பதற்கு தேவைப்படும் மூன்றில் இரண்டு வாக்குகள் செனட் சபையில் கிடைக்கவில்லை என்று செனட்டின் குடியரசுக் கட்சித் தலைவர் மிச் மக்கோனல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடு என்று இந்த ஆயுத விற்பனைக்கு ஆதரவானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் உலகின் மிகப்பெரும் மனித அவலங்களில் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடும் யெமன் போரில் ஐக்கிய அரபு இராச்சியம் ஈடுபட்டிருப்பதாக அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

எனினும் கடந்த நவம்பர் 3ஆம் திகதிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவிக்கு வந்ததும் இந்த ஆயுத விற்பனையை மீளாய்வு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

 

Fri, 12/11/2020 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை