ஆஸி. தடுப்பு மருந்து சோதனை நிறுத்தம்

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் கொவிட்–19 தடுப்பு மருந்து ஒன்று, எச்.ஐ.வி தொற்று இருப்பதாகத் தவறான பரிசோதனை முடிவுகளைக் காட்டியதைத் தொடர்ந்து அந்த மருந்துக்கான சோதனை கைவிடப்பட்டுள்ளது.

குவீன்ஸ்லந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து சி.எஸ்.எல் நிறுவனம் அதனைத் தயாரித்தது.முதற்கட்டமாகச் சுமார் 200 பேரிடம் அந்த மருந்து சோதனை செய்யப்பட்டதில் கடுமையான பாதிப்பு ஏதும் தென்படவில்லை. அந்த மருந்து உடலின் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தியது.

ஆனால் அது எச்.ஐ.வி தொற்றுஅடையாளம் காண்பதற்கான பரிசோதனை முடிவுகளைப் பாதித்தது கண்டறியப்பட்டது.

அந்த மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் தவறாகக் காட்டின.

அதன் காரணமாக, தடுப்பு மருந்தின் இரண்டாம், மூன்றாம் கட்டச் சோதனைகளைக் கைவிட முடிவெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து அவ்வாறு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அவுஸ்திரேலிய அரசு நோவாவக்ஸ் தடுப்பு மருந்தை பெற தற்போது உடன்படிக்கை ஒன்றை எட்டியிருப்பதோடு ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை பெற அது ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரத்தில் உள்நாட்டில் ஒரே ஒரு கொரோனா தொற்று சம்பவமே பதிவாகியுள்ளது.

Sat, 12/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை