முஸ்லிம்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்

கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்தல்

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. மனுக்கல் சமர்ப்பணம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் 27/2 கீழ் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் தடுப்பு மற்றும் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அனைவரினதும் மதம் மதக் கலாசாரங்கள் மற்றும் உரிமைகளுக்கு கௌரமளிக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

உயிரிழப்பவர்களின் சடலங்களை 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்ய வேண்டுமென வழிகாட்டல் வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நான்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வழிகாட்டல்களையே சுகாதாரம் கையாண்டு வருகிறது. கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்கள் அடக்கம் செய்வதால் தொற்று பரவும் என எவ்வித ஆதாரங்களும் இல்லையென ஐ.நா.வின் தொடர்பாளர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களின் மதச் சம்பிரதாயங்களுக்கு அமைய சடலங்களை எரிப்பது தண்டையாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். ஏன் இவ்வாறு அத்துமீறும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது?. மத சிறுபான்மையானவர்களுக்கு ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? என்றும் தமது கேள்வியில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை