Header Ads

பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல்

ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகைக் கொவிட்–19 நோய் நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் எச்சரித்துள்ளார்.

தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கும் வரை நேற்று விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

புதிய விதிமுறைகளால், விடுமுறைக்காலத் திட்டங்கள் பாழானதாக மக்கள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் கடுமையான முடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது.

புதிய வகை வைரஸ் 70 வீதம் அதிகமாகப் பரவக்கூடியது என்று ஆய்வாளர்கள் கூறுவதை அது சுட்டிக்காட்டியது.

முந்தைய வைரஸை விட புதிய ரக கொரோனா தொற்று உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கோ, நோய் பாதிப்பை அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை.

புதிய வகை வைரஸ் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்த வகை வைரஸ் பிரிட்டனுக்கு அப்பாலும் பரவிவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. சில நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

ஜெர்மனி, இத்தாலி, நெதர்லந்து ஆகியவை பிரிட்டனிலிருந்து செல்லும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. பெல்ஜிய அரசாங்கம் அனைத்து விமான, ரயில் சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

புதிய போக்குவரத்துத் தடைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்துக் கலந்தாலோசிக்க பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

அத்தியாவசியப் பொருள் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்வது அதன் நோக்கமாகும். இந்த புதிய ரக கொரோனா தொற்று அச்சம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துகளுக்கு ஒரு வாரத்திற்கு தடை விதிப்பதாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளும் அறிவித்துள்ளன. பொதுவாகவே வைரஸ்கள் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அதிகம் பரவுவதும், அது தனது வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்துக் கொள்வதும் வழக்கம்.

பழைய கொரோனா வைரஸைக் காட்டிலும் இந்த புதிய அதிதீவிர கொரோனா வைரஸில் சுமார் 12க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் காணப்படுகின்றன. சில வைரஸ்கள் மனித உடலில் இருக்கும் புரதத்துடன் ஒட்டிக் கொண்டு செல்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிதாக உருவாகும் வைரஸ்கள் அவ்வப்போது தங்களது உட்கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும். இது வழக்கமான மாறுபாடுதான். சில வைரஸ்கள் ஒவ்வொரு நாடு அல்லது கண்டத்துக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு வேகமாகப் பரவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

ஆனால், இந்த வைரஸ் அதன் மேற்புறத்திலிருக்கும் புரதத்தை மாற்றிக் கொண்டிருப்பது கவலை தரும் விடயமாக விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். இதனால், தற்போதிருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

Tue, 12/22/2020 - 16:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.