அமெரிக்காவில் தடுப்பூசி வழங்கல் இன்று ஆரம்பம்

பைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து அதனை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

முதல் கட்டமாக மூன்று மில்லியன் அளவு தடுப்பு மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கும் பணிகள் வார இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் விநியோகம் பற்றி மேற்பார்வை செய்யும் ஜெனரல் குட்சாவே பெர்னா தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பு மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக 95 வீதம் பாதுகாப்புத் தருவது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே இதன் பாதுகாப்பை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் கொரோனா தொடர்பிலான தினசரி உயிரிழப்பு 3,309 ஆக சாதனை அளவுக்கு உச்சம் பெற்றது.

இது உலகில் ஒரே நாளில் இதுவரை நாடொன்றில் பதிவான அதிக உயிரிழப்பு எண்ணிக்கை என்று ஜோன் ஹோப்கின்சன் பல்கலைக்கழக இணையதள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் தொடக்கம் அமெரிக்காவில் கொரோன உயரிழப்புகள் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டன் மக்களுக்கு வழங்க ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு கனடா, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த டிசம்பர் மாதத்துக்குள் பைசர் நிறுவனம் அமெரிக்காவுக்கு 6.4 மில்லியன் டோஸ் அளவு மருந்துகளைக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவை. எனவே, இந்த 6.4 மில்லியன் டோஸ் மருந்தைக் கொண்டு மூன்று மில்லியன் மக்களுக்கு தான் தடுப்பு மருந்து வழங்க முடியும். ஆனால் அமெரிக்காவின் மக்கள் தொகை 330 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 21 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வாழும் மூன்று மில்லியன் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு, அடுத்த 2021ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் (பொதுவாக மார்ச் – ஜூன் வரையிலான மாதங்கள்) தான் தடுப்பு மருந்து வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். மொடர்னா நிறுவனமும், நேசனல் இன்ஸ்டிட்யூட் ஒப் ஹெல்த்தும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரப்பட்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Mon, 12/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை