உக்ரேனிலிருந்து முதற்கட்டமாக உல்லாச பயணிகள் நேற்று வருகை

185 வெளிநாட்டவர்கள் இருவாரங்கள் தங்கியிருப்பர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாத்துறைக்கு மீள புத்துயிரூட்டும் வகையில் நேற்று முதல் மீண்டும் சர்வதேச உல்லாசப் பிரயாணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முதற்கட்டமாக 185 வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்கள் சுமார் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் உக்ரேனில் இருந்து 185ற்கு அதிகமான உல்லாசப் பிரயாணிகள் ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான பீ.கியூ.555 ஆம் இலக்க விமானம் மூலம் அவர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜீவ் சூரிய ஆரச்சி தெரிவித்தார்.

அவர்கள் நேற்று மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான நிலையத்தில் அவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றதாகவும் அதற்காக விமான நிலைய ஆளணியினர் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து உல்லாசப் பயணிகள் ஒரு தொகையினர் இலங்கைக்கு வருகை தரவிருந்த நிலையில் அவர்களின் வருகை ஒத்திப்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை