திருமலை ஊடகவியலாளர்களுக்கு சுகாதார பாவனை பொருட்கள்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வெளிப்படுத்துவதுடன் மக்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பதில் ஊடகவியலாளர்கள் பெரும் வகிபாகம் வகிப்பதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் நடுநிலையோடு செயற்படுதல் வேண்டும். கொவிட் 19 பரவல் நிலையில் மக்களுக்கு அவசியமான பல தகவல்களை ஊடகங்கள் வெளிக்கொணர்கின்றன.இதன்மூலம் மக்கள் அவதானத்துடன் உரிய நடைமுறைகளுக்கேற்ப செயற்பட ஏதுவாக அமைகின்றது. திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொவிட்டிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையை தொடர்ந்தும் பேண அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார். சுகாதாரப்பாவனைப்பொருட்களை ஹியூமெடிகா லங்கா நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அரசாங்க அதிபர் பணிமனைக்கும் இதன்போது குறித்த ஒரு தொகை சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ்,ஹியூமெடிகா லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் டி.ஜி.பிரிதிவிராஜ் சக ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

(அன்புவழிபுரம் தினகரன நிருபர்)

Sat, 12/19/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை