முஸ்லிம்களின் ஜனாஸா உரிமையை வழங்காமை வெட்கக்கேடான விடயம்

பாராளுமன்றத்தில் TNA எம்.பி சாணக்கியன் கடும் சாடல்

முஸ்லிங்களின் ஜனாஸா உரிமை கூட அவர்களுக்கு வழக்கப்படவில்லை. அப்பாவி முஸ்லிம்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு இணங்கி வாழ்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகப்புத்தகத்தில் பதிவுகளை போட்ட சிறுவர்களை கைது செய்துள்ளனர், நினைவுத் தூபிகளை உடைத்து நாசமாக்குகின்றனர், கார்த்திகை தினத்தில் கூட கோவிலில், வீடுகளில் விளக்கு ஏற்றியமைக்காக கைதுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்லாமியர்கள் ஏன் இன்று நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கின்றனர் என சிந்தித்துப்பாருங்கள், அவர்களின் ஜனாஸா உரிமை கூட அவர்களுக்கு வழக்கப்படவில்லை. அப்பாவி முஸ்லிம்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு இணங்கி வாழ்கின்றனர், அவர்களுக்கான அடிப்படை உரிமையை கூட அவர்களுக்கு வழங்கவில்லை.

இதையெல்லாம் தெரிந்தும் முஸ்லிம் எம்.பி.க்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகக வாக்களித்துள்ளனர்.

தமிழர்களுக்கு இறந்தவர்களை நினைவேந்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கான நீதிமன்றத்தை நாடி நீதி கேட்கவேண்டி உள்ளது, கிறிஸ்தவர்களும் தம்மில் உயிரிழந்தவர்களுக்கான நீதி கேட்கின்றனர். உண்மையில் இலங்கையர்களாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன . இனியும் இதே காரணிகளை கூறிக்கொண்டு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம். எமது குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக நாட்டை ஒடுக்கிவிட வேண்டாம். உங்களுடன் கைகோர்த்து நாட்டை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்றார்.(பா)

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Mon, 12/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை