மொடர்னா தடுப்பு மருந்துக்கும் அமெரிக்காவில் பச்சைக்கொடி

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்திற்கான ஆலோசனைக் குழு மொடர்னா நிறுவனத்தின் கொவிட்–19 தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மொடர்னா தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதால் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அபாயங்களைக் காட்டிலும், நன்மைகளே அதிகம் என ஆலோசனைக் குழு தெரிவித்தது.

அதன் மூலம் வைரஸ் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் இரண்டாவது தீர்வு அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த வாரம் கொவிட்–19 நோய்க்கான பைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்துக்கு அந்த ஆலோசனைக் குழு அங்கீகாரம் அளித்தது. அதையடுத்து அந்த மருந்துக்கான அவசரப் பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் வழங்கியது.

அமெரிக்கா 200 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. மொடர்னா மருந்துக்கு உணவு, மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்த விரைவில் இந்த மருந்துகளின் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மொடர்னா தடுப்பு மருந்து -20 செல்சியஸ் தட்பவெப்பநிலையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலையில் அது  -75 தட்பவெப்பநிலையில் எடுத்தச் செல்ல வேண்டி உள்ள பைசர் தடுப்பு மருந்தை விட விநியோகிப்பது இலகுவானதாக உள்ளது.  எனினும் பைசர் தடுப்பு மருந்து போன்று மொடர்னாவும் இரு முறை போட்டுக் கொள்ள வேண்டி உள்ளது. அந்த ஊசி 28 நாள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் கேம்ப்ரிட்ஜ், மசசுட்ஸை தளமாகக் கொண்ட மொடர்னா நிறுவனத்திலேயே அதிக அளவான இந்தத் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

எனினும் பைசர் தடுப்பு மருந்து ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உட்பட பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  
மொடர்னா தடுப்பு மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 வீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா அரசு மொத்தம் 56 மில்லியன் டோஸ் அளவு மொடர்னா தடுப்பு மருந்தை பெற திட்டமிட்டிருப்பதோடு அதில் முதல் இரண்டு மில்லியன் மருந்துகளை வரும் மார்ச் மாதம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. 

பிரிட்டன் ஏற்கனவே இரண்டு மில்லியன் அளவு மொடர்னா தடுப்பு மருந்துகளுக்கு முன் பதிவு செய்துள்ளது.  80 மில்லியன் டோஸ்களை பெற ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதில் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் மேலும் மருந்துகளை பெறும் சாத்தியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

50 மில்லியன் மொடர்னா தடுப்பு மருந்துகளை பெற ஜப்பானும் 20 மில்லியனைப் பெற தென் கொரியாவும், 7.5 மில்லியனுக்கு சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. 

Sat, 12/19/2020 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை