விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்

- அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் அகிலன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களில் பணி புரிகின்றவர்கள் சுகாதார வைத்தியதிகாரிகளிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டுமென, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடந்த 25 நாட்களாக ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து மூடப்பட்டிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை திறப்பதற்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிலையங்களில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சுகாதார வைத்தியதிகாரியிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் என்பன அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே போல் அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிலையங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டும். கைகழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார். திறந்த காற்றோட்டமுள்ள இடமாக இருப்பதோடு, ஒருவருக்கு பாவிக்கப்படும் சீலை மற்றவருக்கு பாவிக்க முடியாது. அத்துடன் உபகரணங்கள் உடனுக்குடன் கிருமித் தொற்று நீக்கம் செய்ய வேண்டுமெனவும், கடைக்குள் கட்டாயம் 01 மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.

சிகை அலங்கார நிலையம் மற்றும் அழகுக் கலை நிலையங்களுக்குச் செல்லுபவர்கள் நேர ஒதுக்கீட்டினை பெற்றுச் செல்வது இலகுவாக அமையுமென தெரிவித்தார்.

மேற்குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு சிகை அலங்கார நிலையம் மற்றும் அழகுக் கலை நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுவதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Sat, 12/26/2020 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை