சமுர்த்தி திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய விசேடகுழு

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய சமுர்த்தி உதவி பெறுவோருக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 05 பேர் கொண்ட விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி புதிய சமுர்த்தி உதவியாளர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதை யடுத்து துறைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் பணிப்பின் பேரில் மேற்படி அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் ஐவரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் புதிய சமுர்த்தி உதவியாளர்களாக 04 இலட்சத்து 33 ஆயிரத்து 194 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர் மேற்படி ஐவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

மேற்படி சமுர்த்தி உதவியாளர்களுக்கான உறுதிப்பத்திரம் மற்றும் 06 இலட்சம் கோவைகளை அச்சடிப்பதற்காக எட்டு மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டமை, நான்கு இலட்சம் போஸ்டர்கள் அச்சடிப்பதற்காக 170 மில்லியனை செலவிட்டமை, நிகழ்வுகளுக்காக தற்காலிக மண்டபங்களை அமைப்பதற்கும் டீ சேர்ட்கள் கொள்வனவு செய்வதற்கும் ஆறு கோடிக்கு மேல் நிதியை செலவு செய்தமை ஆகியவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பதாக மேற்படி குழு அதன் அறிக்கையை இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கு கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/16/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை