கொரோனா திரிபு: பிரிட்டனுக்கான எல்லைகளைத் திறந்தது பிரான்ஸ்

கொவிட்–19 அச்சம் காரணமாக மூடப்பட்ட பிரிட்டனுக்கான ரயில், விமான மற்றும் கடல் போக்குவரத்து தடையை பிரான்ஸ் நேற்று தளர்த்தியது.

இதன்படி நோய்த் தொற்று இல்லை என்பது சோதனை மூலம் அண்மையில் உறுதி செய்யப்பட்ட பிரான்சில் வாழும் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தடை காரணமாக நிர்க்கதியான லொரி ஓட்டுநர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்வதற்கு பிரிட்டன் படையினர் இணைந்துள்ளனர்.

எல்லை மூடப்பட்டது தொடக்கம் இவ்வாறு ஆயிரக்கணக்கான சரக்கு லொரிகள் நிர்க்கதியாகின.

கொரோனா வைரஸின் வேகமாகப் பரவக் கூடிய புதிய திரிபு ஒன்ற பற்றி பிரிட்டன் எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே பிரிட்டனுக்கான போக்குவரத்தை பல நாடுகளும் துண்டித்தன. இந்த புதிய ரக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் நான்காம் கட்ட முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கான தடையை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளும் தளர்த்தியுள்ளன.

எனினும் இத்தாலி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 50க்கும் அதிகமான நாடுகள் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ந்தும் தடை விதித்துள்ளன.

இந்த முடக்கத்தால் பிரிட்டனுக்கான சரக்கு பொருட்கள் வருகையில் தேக்கம் ஏற்பட்டதோடு, சில பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் காலியாகியுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சில பகுதிகளில் மக்கள் அலைமோதினர். இதனை அடுத்து எல்லையை திறக்கும்படி பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரான்ஸை கேட்டுக்கொண்டார்.

Thu, 12/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை