தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை அணுகும் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அமெரிக்க துாதுவர் பாராட்டு

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்க்ைகத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் (Alaina B. Teplitz) அலெய்னா பி ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (01) மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந் நிலையில், இந்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதே இன்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை, குருநகர், - பேசாலை போன்ற மீன்பிடித் துறைமுகங்களையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, நீர் வேளாண்மையை விருத்தி செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அத்துடன் துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது, கடற்றொழில் செயற்பாடுகளில் காணப்படும் சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைரங்கள் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியுமென்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக பயன்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த – தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், Alaina B. Teplitz,

தேசிய நல்லிணக்தின் மூலமே பிரச்சினைகளை அணுக முடியும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை பாராட்டியதுடன், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற தமிழர் என்ற அடிப்படையிலும் பாராளுன்ற பேரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.

 

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை