கட்டுக்கடங்காத கொரோனா பரவல்: பிரிட்டன் மருத்துவமனைகள் திணறல்

பிரிட்டனில் கொவிட்–19 நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடுகின்றன.

தலைநகர் லண்டனிலும், நாட்டின் தெற்குப் பகுதியிலும் உள்ள சில வட்டாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சில மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மருத்துவ உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளை அங்கு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இடப் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு அதிகம் பரவுவதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் மட் ஹன்காக் அதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை 53,135 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 414 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையே அந்நாட்டில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை முதல் முறை 40,000ஐ தாண்டியமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதாரத் துறை முன்னெப்போதும் சந்திக்காத அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாக ஹன்காக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் அதிகமான தொற்றாயளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Thu, 12/31/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை