குடும்பத்தினருடன் நத்தார் புது வருடத்தை கொண்டாடுங்கள்

மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து

பேராயர் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

நத்தார் பண்டிகை, புது வருடம் மற்றும் அதனையொட்டிய காலங்களில் மத அனுஷ்டானங்களுக்கு மட்டுமே முன்னுரிமையளித்து செயற்படுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கத்தோலிக்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று எச்சரிக்கை சூழ்நிலையில் இம்முறை  நத்தார் பண்டிகையை வீட்டில் இருந்தவாறு குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நத்தார் பண்டிகை காலங்களில் நாம் ஏனைய மக்கள் போன்று அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமாகும்.

குறிப்பாக மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் ஏனைய மாகாணங்களுக்கும் அது பரவும் அச்சுறுத்தல் நிலையை தெளிவாகத் தெரிகிறது.

அதனால் ஏனைய வருடங்களைப் போன்று விமரிசையாக நத்தாரைக் கொண்டாடுகின்ற சூழ்நிலை இவ்வருடம் எமக்குக் கிடையாது. இந்த வருட நத்தாரின் போது நாம் சமய அனுஷ்டானங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதனைக் கருத்தில் கொண்டு மக்கள் கொழும்பிலிருந்து வெளிச்செல்லுதல் வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருதல் போன்றவற்றை முடிந்தளவு மட்டுப்படுத்துவது அவசியம்.

உறவினர்களை பார்க்க செல்வதை இந்த முறை தவிர்த்துக் கொள்வோம். களியாட்ட நிகழ்வுகள் மற்றும் குழுவாக இணைந்து விருந்துபசாரங்களை நடத்துவதைத் தவிர்ப்போம். குடும்பத்தினருடன் இணைந்து அர்த்தமுள்ள நத்தார் திருநாளைக் கொண்டாடுவோம் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை