ஈரானில் போராட்டத்தை தூண்டிய செய்தியாளர் தூக்கிலிடப்பட்டார்

ஈரான் அரசுக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருந்த இணையதள செய்தியாளர் ருஹோல்லா ஸாம் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

ஈரான் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் வெடித்தது.

நாளடைவில் அந்தப் போராட்டம், மதகுரு அயதுல்லா அலி கமேனி தலைமையிலான அரசுக்கு எதிரான அரசியல் போராட்டமாக உருவெடுத்தது.

அப்போது, புகழ்பெற்ற ‘டெலிகிராம்’ தகவல் தொடர்பு செயலி மூலம் பல்வேறு தகவல்களை ருஹோல்லா ஸாம் வெளியிட்டு வந்தார்.

மேலும், அவரது வலைதளத்திலும் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தகவல்கள் பரப்பி வந்தார்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தைத் தூண்டியதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மரண தண்டனை விதித்தது.இந்த நிலையில், ருஹோல்லா சனிக்கிழமை அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியும் ‘ஐ.ஆர்.என்.ஏ’ செய்தி நிறுவனமும் தெரிவித்தது.

2017 ஆம் ஆண்டில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய அந்தப் போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போராட்டங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது.

Mon, 12/14/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை