கொள்முதல், விநியோகித்தல்; இலங்கைக்கு ஐ.நா. உறுதி

பிரதமருடனான சந்திப்பில் ஐ.நா பிரதிநிதிகள் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுதல், விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான நேற்றைய விசேட சந்திப்பின் போதே அதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் (Hanaa Singer) ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி (Dr. Razia Pends) கலாநிதி ராஸியா பெண்ட்ஸ் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி (Tim Sutton). டிம் சுட்டன் ஆகியோர் இணைந்த குழுவினர் நேற்றைய தினம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பல சர்வதேச நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊசி மருந்துகளை தயாரிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் அந்த ஊசி மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளல், விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவினர் இலங்கை அதிகாரிகளிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான நாடுகளில் கொரோன வைரஸ் இரண்டாவது அலை தொடர்ந்துள்ளமையை அறியமுடிகிறதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதன்போது தெரிவித்துள்ள நிலையில் இந்த வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தடுப்பூசிகளால் மட்டுமே முடியுமென்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக யுனிசெப் நிறுவனம் தற்போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் முதலில் 20 வீதமானோருக்கு அதிகமாக தடுப்பூசிகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் ஒத்துழைப்பு வழங்க முடியுமென்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இது புதிய தடுப்பூசி மருந்து என்றும் அது மக்கள் மரணிப்பதை தடுக்கும் என்றும் தெரிவித்துள்ள டாக்டர் பெண்ட்ஸ் தொற்று எந்தளவு தூரம் குறையும் என்பது தொடர்பில் குறிப்பிட முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 12/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை