கல்முனையில் தந்தையும் மகனும் நடத்திய நடைபவனிக்கு தடை

நீதிமன்ற உத்தரவிற்கமைய வழிமறித்த பொலிஸார்

கொரோனா தொற்று நோயினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்படுவதை எதிர்த்தும், அவற்றை நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை வலியுறுத்தியும் கல்முனை நகரில் இருந்து ஆரம்பமான தந்தை- மகன் நடைபவனி கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்முனையை சேர்ந்த முஹம்மட் பௌஸ் எனும் தந்தையும் அவரது 08 வயது நிரம்பிய உஸ்மான் எனும் புதல்வரும் நேற்று (28) கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து தமது நடைபவனியை ஆரம்பித்து, சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்று, அப்பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்புடன் நடைபவனியை நிறைவு செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் நேற்றுக் காலை 10.00 மணியளவில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் அவர்கள் நடைபவனியை ஆரம்பித்து, கல்முனை நகர மண்டபம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் சென்று கொண்டிருந்த நிலையில், பொலிஸார் வழிமறித்து, நடைபவனியைக் கைவிடுமாறு வலியுறுத்தியபோதிலும் தந்தையும் மகனும் அதற்கு இணங்கவில்லை.

இதன்போது சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஜனநாயக ரீதியான செயற்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்து, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் குறித்த நடைபவனியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட நீதிமன்ற கட்டளைப் பத்திரம் கொண்டு வரப்பட்டு, தந்தையிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்தையும் மகனும் கல்முனையை அடுத்துள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை வாகனத்தில் சென்று, அங்கு மகஜரை கையளித்து, தமது போராட்டத்தை நிறைவு செய்தனர்.

 

கல்முனை விசேட நிருபர் 

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை